சென்னை:கிண்டியில் சிட்கோ அலுவலக கூட்ட அரங்கில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் அக்.29 ஆம் தேதியன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் 38 மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்கள் இடையே திறனாய்வு கூட்டம் நடைபெற்றது.
அத்துறைகளால் செயல்படுத்தபட்டு வரும் சுயவேலைவாய்ப்பு கடன் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) முதலீட்டு மானியம் உள்ளிட்ட பல்வேறு மானிய திட்டங்கள் மற்றும் தொழிற் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கடனுதவி
தமிழ்நாடு தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த செயல்படுத்தப்படும், புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின் கீழ், புதிய 5 கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.9.33 லட்சம் மானிய உதவித்தொகையாகவும், சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ், 34 பயனாளிகளுக்கு ரூ. 14.44 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ. 2.57 கோடி மானியத்துடன் கடன் உதவியும் வழங்கப்பட்டது.
மேலும், முதலீட்டு மானிய திட்டத்தின் கீழ் 5 நிறுவனங்களுக்கு ரூ. 1.09 கோடி மானியம் வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர், மாவட்ட தொழில் மையங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் நடப்பாண்டில் ( 2021 -22 ), இதுவரை 2912 பயனாளிகளுக்கு ரூ107.50 கோடி மானியத்துடன் ரூ. 352.93 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல கோடிகள் மானியம்
MSME குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம், மின் மானியம், பின்முனை வட்டி மானியம் மற்றும் மின்னாக்கி மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த நிதியாண்டில், இதுவரை 2868 - MSME நிறுவனங்களுக்கு ரூ.173.72 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்பாளர்கள்
மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், வாகன டெலிமேட்டிக்ஸ் உருவாக்கிய பிரப்ஜோத் கவுருக்கு ரூ.2.50 லட்சமும், இணைய பாதுகாப்பு மின்பொருள் தளம் அமைத்த சித்தார்தனுக்கு ரூ. 2.50 லட்சமும், வெப்ப - உப்பு நீக்கி முறை மூலம் உப்பு நீரை குடிநீராக சுத்திகரிக்கும் கருவியை உருவாக்கிய பிரித்திவ் ராஜனுக்கு ரூ. 2.37 லட்சமும், விர்ச்சுவல் ரியாலிட்டியைப் பயன்படுத்தி நோயாளி தொலைதூரத்தில் இருக்கும் போதே மருத்துவரால் இணையதளத்தை உபயோகப்படுத்தி கண்களை பரிசோதிக்கும் கருவியை உருவாக்கிய மகேஸ்வரி சினிவாசனுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்பட்டது.
மேலும், லேத் ஆப்செட் மூலம் மிக எளிமையான முறையில் துளையிட உதவும் கருவி உருவாக்கிய அருணா ராணிக்கு ரூ. 96,000 ஆயிரமும் என்று மொத்தமாக, 5 கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சி பணிக்கும், சந்தைப்படுத்தலுக்கும் தமிழ்நாடு அரசின் முதல் தவணை நிதியுதவியாக ரூ. 9.33 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 161 கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.4.19 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் சிறப்பு செயலர் மகேஸ்வரி, கூடுதல் ஆணையர் கிரேஸ்லால்ரின்டிக்கி பச்சாவ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தியாகராஜர் கோயில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் ஆட்சியர் ஆய்வு