தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2018-19ஆம் கல்வியாண்டில் காலியாக இருந்த இரண்டாயிரத்து 144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் 2019 செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
அதனடிப்படையில் 2019 நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் 2019 நவம்பர் 20ஆம் தேதி 12 பாடங்களுக்கான தேர்ச்சிபெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் 2020 ஜனவரி 3ஆம் தேதி தமிழ், வரலாறு, பொருளியல் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில் வேதியியல் பாடத்திற்கு முதுகலை ஆசிரியர்கள் தேர்வுசெய்ததில் குளறுபடிகள் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். இது குறித்து நீதிமன்றத்திலும் பாமக வழக்கறிஞர் பிரிவு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் வேதியியல் பிரிவில் 356 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கும், பொருளியல் பிரிவில் 100 பணியிடங்களுக்கும் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை பள்ளிக் கல்வித் துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அளிக்கவில்லை.
இந்நிலையில் பள்ளிகளை திறக்கும்போது காலியாக உள்ள 800 முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பித் தர வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்குப் பள்ளிக் கல்வித் துறை கடிதம் எழுதியுள்ளது.
மேலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாகப் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தினை வலியுறுத்திவருகிறது.
இந்த நிலையில் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க:ஒசூரில் சிகரெட் நிறுவனத்தின் அலுவலர் காரில் கடத்தல்