சென்னை:தமிழ்நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு நடைபெற்ற குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22ஆம் தேதி என்.ஐ.ஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு, தமிழ்நாட்டை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 11 பேரை கைது செய்தனர்.
இந்த சோதனையை கண்டிக்கும் விதமாக பல இடங்களில் அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டும், பேருந்துகள் மீது கல் வீச்சு தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கோவையில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்கள் என தொடர்ச்சியாக 7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பாஜக பிரமுகர்களின் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இதனால் தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் கமாண்டோ படையினர், சிறப்பு அதிரடி படையினர் உட்பட ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட 100 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து பல பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பாஜகவினர் நடத்தி வந்த கடையில் டீசல் பாக்கெட் வீசிய வழக்கில் 4 பேர் கைது