உலக நாடுகளை கரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதிகம் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அதுபோன்ற தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க சிறப்புக்குழுக்களை அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தக் குழுவில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு புதிய தொழில் நிறுவனத்தையும் தொடர்புகொண்டு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்புவிடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 42 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.30 ஆயிரத்து 664 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரத்து 612 பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கும் வகையில் புதிய தொழில் கொள்கையும் வெளியிடப்பட்டது.