சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 5 மாதக் காலத்தில் ரூ.13,68,718 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுது போக்கிற்காகவும் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகின்றன. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பூங்கா பராமரிப்பு பணிகளில் காவலர், தூய்மை பணியாளர் மற்றும் தோட்டப் பராமரிப்பாளர் போன்ற ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட குறைவான அளவில் பணியாளர்கள் இருந்தால் ரூ.500 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மூன்று முறைக்கு மேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாளொன்றுக்கு ரூ.600-ம், கழிவறை பகுதிகளை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாளொன்றுக்கு ரூ.2000-ம் அபராதமாக விதிக்கப்படுகிறது.