கிளப்பில் சூதாட்டம்: 13 பேர் கைது, 11 செல்போன்கள், ரூ.42,000 பறிமுதல்! - சென்னை கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது
சென்னை: கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சினிமா போட்டோகிராஃபர் உள்பட 13 நபர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் 42ஆயிரம் ரூபாய், 11 செல்போன்களைப் பறிமுதல்செய்தனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டை காசி டாக்ஸி பிள்ளையார் கோயில் தெருவில் இயங்கிவரும் சோடியாக் ரீகிரியேஷன் கிளப் ஒன்றில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தி.நகர் துணை ஆணையரின் சிறப்புக் குழுவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சினிமா போட்டோகிராஃபரான ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு (52), கிளப் உரிமையாளர் பாஸ்கர் (51), மேலாளரான சுஜைஸ் குமார் (43), பொறியாளரான ராஜேஷ் (56) உள்பட 13 நபர்களைக் கைதுசெய்தனர்.
இவர்களிடமிருந்து 42 ஆயிரம் ரூபாய், 11 செல்போன்கள், நான்கு சீட்டுக்கட்டுகள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எழுதி வாங்கிக் கொண்ட காவல் துறையினர் பிணையில் விடுவித்தனர்.