பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் இரண்டாம் தேதி தொடங்கி, 24ஆம் தேதி முடிவடைந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வேளையில் அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, ஏற்கனவே மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விடைத்தாள்கள் மைய மதிப்பீட்டுப் பணிகளும், மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
மேலும் இந்த மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 7ஆம் தேதி அன்று தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு, கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும், மார்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.