சென்னை: தேசிய தன்னார்வல ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தானத்தில் சிறந்தது ரத்த தானம். ரத்த தானம் உயிர் காக்கும் கொடையாகும். குழந்தைப் பேறின் போதும், அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட தலசீமியா போன்ற நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் ரத்தம் அதிகம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளுக்கான கருப்பொருள் 'உதிரம் கொடுப்போம்; உலகினை துடிப்புடன் வைத்திருப்போம்' என்பதாகும்.
இந்நாளில் பிறர் உயிரைக் காக்க ரத்த தானம் செய்யும் தன்னார்வ ரத்தக்கொடையாளர்கள் மற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளர்களை தமிழ்நாடு அரசு பாராட்டி சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருகிறது.
ரத்தம் தேவைப்படும் நபர்களுக்குப் போதுமான, பாதுகாப்பான, தரம் வாய்ந்த ரத்தம் மற்றும் ரத்த உட்பொருட்கள் அளிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் 96 அரசு ரத்த வங்கிகள், 10 மத்திய அரசு ரத்த வங்கிகள், 212 தனியார் ரத்த வங்கிகள் என 318 ரத்த வங்கிகளும், 393 அரசு ரத்த சேமிப்பு மையங்கள் மற்றும் 155 தனியார் ரத்த சேமிப்பு மையங்களும் செயல்படுகின்றன.
அரசு ரத்த வங்கிகள் மூலம் ஏப்ரல் 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, 778 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 1,18,363 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரேஷ்அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் மரு.குருநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'உயர் பணிகளில் இருந்தாலும் மண்ணையும் தாய்மாெழியையும் மறக்காதீர்!'