சென்னை:பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதும் தனித்தேர்வர்கள், மாணவர்கள் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு நவம்பர் 18ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“பத்தாம் வகுப்பு 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012ஆம் ஆண்டிற்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அனைத்து தனித்தேர்வர்களும் நவம்பர் 18ஆம் தேதிமுதல் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடுசெய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பப் படிவம் இணையதளத்தில் பதிவிறக்கம்
பயிற்சி வகுப்புகளுக்கு 80 விழுக்காடு வருகைதந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2021-2022ஆம் கல்வி ஆண்டில் 2022 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சிக்கு விண்ணபித்தவர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்புகொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாள்கள், மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினைத் தவறாமல் எழுதிட வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தேர்வர்கள் தொடர்புகொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விவரங்களைப் பூர்த்திசெய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் தனித்தேர்வர்கள் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்விற்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மேலும் அறிவியல் பாடச் செய்முறைத்தேர்வும் கட்டாயம் எனப் பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே உத்தரவிட்டு, நடைமுறையில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு