சென்னை:தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்விற்கு 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
அதேபோல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் பதிவு செய்தனர். தேர்விற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் 3 முதல் 4 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதைத்தொடர்ந்து, தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் இன்று (ஜூன் 20) வெளியிடுகிறார். அப்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்களை அறிவிக்கிறார்.
இணையதளத்தில் தேர்வு முடிவுகள்: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுத்துறை மூலம் வெளியிடப்படுகிறது.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.