இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில், தமிழ்நாடு
முழுவதும் 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் ஆகியவை விரைவாக உதவிடும் வகையில் தயார் நிலையில் உள்ளன.
குறிப்பாக, கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை தேவை ஏற்பட்டால் அதிகரிக்கப்படும்.
அதீத கனமழையால் தொலைத்தொடர்பு சேவை பாதிப்படைந்தாலும் தகவல்கள் கிடைக்கப்பெறும் வகையில் 108 அவசரகால ஊர்திகளை காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அருகில் ஆம்புலன்ஸ்களை நிறுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் 108 அவசரகால சேவை கட்டுப்பாடு மையத்திற்கு, அதிக அளவிலான அழைப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால், கூடுதலாக பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மின்தடை ஏற்படாமலிருக்க இரண்டு ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.