தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 1,323 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த மார்ச் மாதம் முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 28 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 253 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து 8 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறுகையில், ”கரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் சீக்கிரமாக குணமடைய அதுவும் காரணமாக அமைந்தது.
குணமடைந்த அனைவரும் 14 நாள்கள் தங்களது வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். மீண்டும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை தொடர்புகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.