எலான் மஸ்க் - ட்விட்டர் இடையேயான பனிப்போர் தற்போது வலுத்து வருகிறது. ட்விட்டரின் போலி கணக்குகள் குறித்து தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரில் வாக்கெடுப்பு ஒன்றை கடந்த ஆக. 6ஆம் தேதி நடத்தினார்.
ட்விட்டரை தினமும் பயன்படுத்தும் போலி/ஸ்பேம் கணக்குகள் ஒட்டுமொத்தமாக 5 விழுக்காடுதான் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. ட்விட்டரின் கருத்தை முன்வைத்து எலான் மஸ்க் இந்த வாக்கெடுப்பை நடத்தியுள்ளார். இதில், ட்விட்டரின் போலி கணக்குகள் குறித்த கருத்தை மறுப்பதாக 65 விழுக்காட்டினரும், கருத்தை ஏற்பதாக 35 விழுக்காட்டினரும் வாக்களித்துள்ளனர்.
இதில், மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 766 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு முடிவுகளை ட்விட்டரில் குறிப்பிட்டு, "ஒருவழியாக ட்விட்டர் பதிலளித்துவிட்டது" என பதிவிட்டுள்ளார். அதாவது, ட்விட்டர் பயனார்கள் போலி கணக்குகள் குறித்து விழிப்புடன் இருப்பதாகவும், ட்விட்டர் நிறுவனத்தின் கருத்தை நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ட்விட்டரின் போலி கணக்குகள் குறித்த உண்மையான தகவலை அளிக்கும்பட்சத்தில் நிறுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்கலாம் என ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலுக்கு, எலான் மஸ்க் சவால் விடுத்துள்ளார். முன்னதாக, ட்விட்டரின் போலி கணக்குளின் விகிதம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க பராக் அகர்வாலுக்கு மஸ்க் அழைப்பு விடுத்தார். அதில், அவர் கூறும் கருத்தை நிரூபித்து காட்டட்டும் என்றும் கூறியுள்ளார்.
சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானதாக தகவல்கள் வெளியாகின. ஸ்பேம் மற்றும் போலிக்கணக்குகள் குறித்த தகவல்களை தர ட்விட்டர் நிறுவனம் மறுப்பதாகக் கூறி, ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஜூலை 8ஆம் தேதி எலான் மஸ்க் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, எலான் மஸ்க் மீது ட்விட்டர் வழக்கு தொடர்ந்தது. எலான் மஸ்க் ஒப்பந்த நிபந்தனைகளை மீறி நடந்து கொண்டதாகவும், அவரது நடவடிக்கையால் ட்விட்டருக்கு ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"பிளெண்டர்பாட் 3 வெப்" - மெட்டாவின் சாட்பாட் அப்டேட்!