மும்பை:வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, செயற்கை நுண்ணறிவு உரையாடல் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ள UPI AI உரையாடல் வசதி அதனை தொடர்ந்து படிப்படியாக அனைத்து இந்திய மொழிகளிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கை நடவடிக்கை உள்ளடக்கிய நிதிக்கொள்கை கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனையை முழுமையாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உரையாடல் வசதியின் மூலம் இனி பெறலாம் என தெரிவித்து உள்ளார்.
இந்த திட்டத்தை மேற்கொள்வதன் மூலம் வங்கி சேவைகளை டிஜிட்டல் துறையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து வங்கியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கை நடவடிக்கைகள் குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதையும் படிங்க:வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் கேட்ஜெட்ஸ் இறக்குமதிக்கான தடை தற்காலிக நீக்கம் - மத்திய அரசு!
அந்த அறிக்கையில், பொருளாதாரத்தின் பல்வேறு கட்டணத் தேவைகளை எளிதாக்கும் நோக்கத்தில் UPI-யில் டிஜிட்டல் ரீதியாக பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று செயற்கை நுண்ணறிவு உரையாடல் வசதி. இந்த வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் உரையாடல் மூலம் பணம் அனுப்புதல், பெறுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் மோசடிகள் தவிர்க்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் எளிமையாக தங்கள் வங்கி பரிவர்த்தனைகளைக் கையாளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் UPI செயற்கை நுண்ணறிவு உரையாடல் வசதி பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வரும் காலங்களில் படிப்படியாக இந்திய மொழிகள் அனைத்திலும் இந்த சேவை பெற முடியும் என இந்திய ரிசர்வ் வங்கியின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னரே அதில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்துத் தெரிய வரும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக ரெப்போ வட்டி விகிதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்தவித மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவித்தார். மேலும், தக்காளி, வெங்காயம் மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை படிப்படியாகக் குறையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மெட்டா சிஇஒ மார்க் ஜுக்கர்போர்க் பயன்படுத்தும் செல்போன் இதுவா? இணையத்தை கலக்கும் செல்போனின் தகவல்கள்!