சென்னை:ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது அமேசான் மற்றும் பிளிப்கார்ட். இந்த நிறுவனங்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாகப் பெறமுடியாத பொருட்கள் எதுவுமே இல்லை என்று கூறலாம். கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களை வைத்துள்ள இந்த நிறுவனங்களோடு கைகோர்த்து உங்கள் பொருட்களை இருந்த இடத்தில் இருந்தே விற்கலாம். அது எப்படி? என்ன செய்ய வேண்டும்? என்னென்ன பொருட்களை விற்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஆன்லைனில் பொருட்களை விற்பது எப்படி; உங்களிடம் உள்ள பொருட்களை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்ய அந்நிறுவனங்களின் விற்பனை தளத்தில் உங்கள் விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு, பான் அட்டை எண், ஜிஎஸ்டி எண், வங்கிக் கணக்கு மற்றும் தொலைப்பேசி எண் ஆகியவை தேவை. அதனைத் தொடர்ந்து, அமேசானில் உங்கள் பொருளை விற்பனை செய்ய விரும்பினால், https://sell.amazon.in/ என்ற தளத்திலும், பிளிப்கார்ட் என்றால் https://seller.flipkart.com/என்ற இணையத்தளத்திற்குள்ளும் நுழைந்து பதிவு செய்யுங்கள்.
இதையும் படிங்க:Family Budget plan in Tamil: உயரும் செலவுகள்! சேமிப்பது எப்படி.?
பிறகு உங்கள் பொருட்களின் புகைப்படங்கள் மற்றும் விலை உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து ஆர்டர்களை பெறுங்கள். உங்கள் பொருளுக்கான விலையை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யாது, நீங்கள் தான் நிர்ணயம் செய்வீர்கள். குறிப்பிட்ட அளவு கமிஷனை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும். வாடிக்கையாளரிடம் இருந்து ஆர்டர் பெற்றவுடன் பொருளை பேக்கிங் செய்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட நாளில் அந்நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் உங்களை அணுகி பொருளைப் பெற்றுக்கொள்வார்கள்.
தொடர்ந்து அந்த பொருளை வாடிக்கையாளரிடமும் சேர்த்து விடுவார்கள். தொடர்ந்து உங்கள் பொருளுக்கான பணத்தை அமேசான் நிறுவனமாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறையும், பிளிப்கார்ட் நிறுவனமாக இருந்தால் 7 முதல் 15 நாட்களிலும் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்திவிடும். உங்கள் பொருளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கான ஆதாரத்தை வழங்கி அந்நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள அந்நிறுவனங்களின் விற்பனையாளர் சேவை மையத்தை தொலைப்பேசி மூலம் அணுகிப் பெற்றுக்கொள்ளலாம்.
இது தவிர வேறு பல ஆன்லைன் நிறுவனங்களும், அதில் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளும் இருக்கின்றன. ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் ஆன்லைன் விற்பனை தளம் உண்மையானதா? ஏமாற்றப்பட ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா? என்ற அடிப்படையில் ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஆன்லைன் மூலம் உங்கள் பணம் மோசடி செய்யப்பட்டுவிட்டது என்ற சந்தேகம் எழுந்தால் உடனடியாக சைபர் க்ரைமின் இலவச தொலைப்பேசி எண்ணான 1930 -தை தொடர்பு கொண்டு புகாரைப் பதிவு செய்யுங்கள்.
இதையும் படிங்க:அதிரடி ஆஃபர்களுக்கு நடுவே பதறவைக்கும் மோசடிகள்.. பண்டிகை பர்சேஸில் கவனம் தேவை..!