ஹைதராபாத்: டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிப் பெறும் அணிகளை நாம் எளிதாக மதிப்பிடுகிறோம். ஆனால், போட்டிக்கு பின்னால் அணிகளில் நடக்கும் வலுவான திட்டமிடலை கவனிக்க மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு லைன்-அப்புகளே அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்கிறது. அதுபோல சரியான நிதித் திட்ட லைன்-அப்புகளுடன் முதலீடு செய்தால் மட்டுமே லாபமடைய முடியும். கிரிக்கெட் அணியில் உள்ள 11 வீரர்களின் வரிசையில் சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமோ அல்லது சிறந்த பந்துவீச்சாளர்கள் மட்டுமோ இருக்க மாட்டார்கள். ஒரு சமநிலை மற்றும் பன்முகத்தன்மை இருக்கும். நிதி திட்டங்களுக்கும் இந்த பன்முகத்தன்மை பொருந்தும்.
ஒரு அணி எப்படி ஒரே பேட்ஸ்மேனை சார்ந்திருக்காமல் பல பேட்ஸ்மேன்களை வைத்திருக்கிறதோ, அதுபோல ஒரே முதலீட்டுத் திட்டத்தைச் சார்ந்து இருக்காமல் நிறுவன பங்குகள், டேர்ம் பாண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள், டெபாசிட்கள், தங்கம் போன்ற பல திட்டங்களை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு ஆட்டத்தின்போது முக்கிய விக்கெட்டைப் பாதுகாப்பது ஒரு முக்கிய உத்தியாகும். அதேபோல விக்கெட்டையே இழக்காமல் ரன்களின்றியும் இருக்க முடியாது. ஆகவே, வைப்பு மற்றும் சேமிப்புகளில் மட்டுமே அதிகப்படியான முதலீடுகள் பலனைத் தராது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
20 ஓவர் கிரிக்கெட்டில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக பவர் பிளே ஓவர்கள் ரன் குவிப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன. முதலீடு செய்யும் போது நமக்கு இதே போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். சந்தை சரிவின் போது, நல்ல பங்குகள் நம் பண திட்ட வரம்பிற்குள் வரும்போது, அவற்றைத் தவறவிடக் கூடாது. பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக 20 ஓவர் போட்டிகளுக்கு 200 ரன்களை அணிகள் இலக்கை நிர்ணயிக்கும். அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை கொடுத்து, ரன்களை குறைக்க திட்டமிடுவர். அப்போது அவசரமாக ரன்களை எடுக்க முயலும் பேட்ஸ்மேன் விக்கெட்டை பறிகொடுப்பார். அதுபோலவே பல முதலீட்டாளர்களும் அதிக வருமானத்தைப் பெறும் திட்டங்களில் முதலீடு செய்து பணத்தை இழக்கிறார்கள். இலக்கு அதிகமாக இருக்கும் போது, நமது திட்டங்களும் புத்திசாலிதனமானதாகவும், எதிர்கால இடர்களை தாங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.