ஹைதராபாத்: சேமிப்பு மற்றும் முதலீடுகளைப் பொறுத்தவரை, நிரந்தர வைப்புத் தொகை, தங்கத்தின் மீதான முதலீடுகள் உள்ளிட்ட உறுதியான வருமானத்தைத் தருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்த இரண்டும்தான் ஏராளமான மக்களின் தேர்வாக இருந்தன.
ஆனால், மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மக்களது விருப்பங்களும் மாறிவிட்டன. தற்போது ஏராளமான முதலீட்டுத் திட்டங்கள் வந்துவிட்டன. குறிப்பாக இளைய தலைமுறையினரும் தற்போது இந்த முதலீட்டுத் திட்டங்களில் அதிக ஈடுபாட்டோடு உள்ளனர். அதேநேரம் அதிக வருவாய் வேண்டும் என்பதற்காக அவர்கள் அவசர கதியில் முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்கின்றனர்.
முதலீட்டுக்குப் பிறகும் தங்களது முதலீட்டுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வது இல்லை. இதனால் அவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. குறிப்பாக கரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பங்குச் சந்தை, டீமேட் கணக்குகள் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் இளைஞர்களின் நிதித் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் முற்றிலும் வேறாக உள்ளன. இளம் தலைமுறையினர் விரைவான நிதி சுதந்திரத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் அதிக வருமானம் தரும் திட்டங்களில் உள்ள ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் அதில் முதலீடு செய்கின்றனர். அதிக லாபத்தில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் நிதிப் பாதுகாப்பிலும் கவனம் வேண்டும்.
பெரும்பாலான இளம் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை நோக்கியே செல்கின்றனர். ஆனால், பங்குச்சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால், பங்குகள் குறையும் நேரத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். அதனால், பங்குச்சந்தையைத் தவிர மற்ற முதலீட்டுத் திட்டங்களையும் பார்க்கலாம். முதலீடு செய்யும் போது அதில் உள்ள ஆபத்து மற்றும் பலன்கள் இரண்டையும் சமநிலையில் வைக்க வேண்டும்.