தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வட்டி விகிதங்கள் உயர்வால் சுமையாகிறதா வீட்டுக்கடன்? - கடனை செலுத்தும் கால அளவு உயரும்

வட்டி விகிதங்கள் உயர்ந்து வருவதால், வீட்டுக்கடன், வாகனக்கடன்களுக்கான வட்டி சுமை அதிகரித்துள்ளது. இதுபோன்ற காலங்களில், கடனை செலுத்தும் கால அளவை நீட்டிக்காமல், இஎம்ஐ தொகையை அதிகரிப்பது நல்லது.

home
home

By

Published : Dec 14, 2022, 1:36 PM IST

ஹைதராபாத்: வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. வட்டி விகிதங்களை உயர்த்துவதாக சில வங்கிகள் அறிவித்துள்ளன. ரெப்போ வட்டி விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வங்கிக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாக அதிகரித்தது. இதனால் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் சுமார் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக்கடன் என்பது மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு, லட்சக்கணக்கில் வட்டி சுமை உயரக்கூடும். இதனால் 20 ஆண்டுகளில் அடைக்க வேண்டிய கடன், 30 ஆண்டுகள் வரை தொடரலாம்.

6.75 முதல் 7 சதவீதத்திற்குள் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி சுமை கடுமையாக அதிகரிக்கும். 8.5 முதல் 9 சதவீதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு பாதிப்பு சற்று குறைவாக இருக்கும். வட்டி விகிதம் குறைவதால், கடனை திருப்பிச் செலுத்தும் காலமும் குறைகிறது. ஆனால், வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், கடனை செலுத்தும் காலம் மீண்டும் அதிகரிக்கும்.

வட்டி விகித உயர்வால், கடனை செலுத்தும் காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டால், அது மிகையாக கருதப்படுகிறது. இது தொடர்பாக அறிந்து கொள்ள, உங்களது கடனின் தற்போதைய நிலையை சரிபார்க்க வேண்டும். இந்த வட்டி விகித உயர்வால், எவ்வளவு கால அளவு அதிகரித்துள்ளது? உங்களது தவணையை அதிகரிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக உங்களது வங்கியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வட்டி விகித உயர்வு மாதாந்திர தவணைக் காலத்தை அதிகரிக்கிறது. சான்றாக, நீங்கள் 6.75 சதவீத வட்டியில், 30 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறீர்கள்- அதற்கு 20 ஆண்டுகளுக்கு மாதம் 22,367 ரூபாய் இஎம்ஐ செலுத்துகிறீர்கள். இந்த நிலையில், உங்களது வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்ந்தால், நீங்கள் 30 ஆண்டுகளுக்கு 23,610 ரூபாய் இஎம்ஐ கட்டும் நிலை ஏற்படும். இதில், கடனை செலுத்தும் காலத்தை மாற்றாமல் இஎம்ஐ மட்டும் உயர்த்தினால், அது 26,520 ரூபாயாக இருக்கும்.

இதனால், உங்கள் வங்கியை விட குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் நிறுவனங்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை அறிய வீட்டுக் கடனின் தற்போதைய சந்தை நிலவரத்தை ஆய்வு செய்யுங்கள். 0.5 முதல் 0.75 சதவீதம் அளவுக்கு உங்களது வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் கூட, வட்டி சுமை கணிசமாக குறையும். சில நேரங்களில் உங்கள் வங்கி, குறைந்த வட்டி விகிதத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பையும் வழங்கலாம். அதற்கு சில செலவுகளும் இருக்கும். அதனால், உங்களின் கடன் சுமை எவ்வளவு குறையும்? அதற்கு எவ்வளவு செலவு செய்யலாம்? என்பதை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். வட்டி விகிதங்கள் உயர்வைப் பொறுத்தவரை, கடனை செலுத்தும் கால அளவை நீட்டிக்காமல், இஎம்ஐ தொகையை அதிகரிப்பது நல்லது.

இனி வரும் காலங்களில் வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள இன்று முதல் தயாராக வேண்டும். அதிக வட்டி விகிதத்தில் உள்ள கடன்களை முன்கூட்டியே முடித்துவிடுங்கள். எப்போதும் இஎம்ஐகளை சரியான நேரத்தில் செலுத்துங்கள். இல்லையெனில் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். குறைந்தபட்சம் 3 முதல் 6 மாத செலவுகள் மற்றும் இஎம்ஐக்கான பணத்தை எப்போதும் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: SIP முதலீட்டில் டாப்-அப் செய்ய தயாரா?

ABOUT THE AUTHOR

...view details