ஹைதராபாத்:ஆன்லைன் மூலம் கடன் பெற்று பலர் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சம்பவங்களை கடந்த சில மாதங்களாக அதிகம் காண முடிகிறது. எந்த ஒரு ஆவணங்களும் இன்றி உடனடியாக கடன் பெற முடியும் என்பதால், இந்த வலையில் பலர் விழுந்து விடுகின்றனர். கடன் தொகை சிறியதாக இருந்தாலும், அபரிமிதமான அதிக வட்டி, அதிகப்படியான தவணைகள் போன்ற சிக்கலில் சிக்கிக்கொள்கின்றனர்.
இத்தகைய சட்டவிரோத கடன் நிறுவனங்களால் பலர் பலியாகி வருகின்றனர். எனவே, எந்தவொரு கடன் பெறும் போது நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை கவனமாக பின்பற்ற வேண்டும். அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கரோனா காலகட்டத்திற்கு பிறகு, நிதி தேவைகள் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்ட கடன் நிறுவனங்கள், எந்த ஆவணங்களும் இன்றி 3000 முதல் 3 லட்சம் வரை கடன் தருவதாகக் கூறி மக்களை குறிவைத்தனர். இதில் சிக்கும் நபர்களிடம் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு, பின் அதிக வட்டி வசூலிப்பதன் மூலம் கடன் வாங்குபவர்களை சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர்.
இத்தகைய இன்னல்களை தவிர்க்க வேண்டும் என்றால், கடன் வாங்குவதற்கு முன்பு, ஒருமுறை தாங்கள் கடன் வாங்கும் நிறுவனங்களின் பயன்பாடுகளையும், அதன் பதிவுகளையும் சரிபார்க்க வேண்டும். அதாவது, இந்தியாவில் இருக்கும் கடன் நிறுவனங்கள், ஆர்பிஐ (இந்திய ரிசர்வ் வங்கி) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆர்பிஐ அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்துடன் இணைந்திருக்க வேண்டும். இதனை சரிபார்த்த பின்பே கடன் பெற வேண்டும்.
மேலும் டிஜிட்டல் கடன்களைப் பெறும்போது, சம்பந்தப்பட்ட செயலிக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் உள்ளதா, இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தங்கள் கடன் பெறும் நிறுவனங்களின் பதிவு எண்களை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் சரிபார்க்க முடியும். மேலும் நிறுவனங்கள் நம்மிடம் முழு KYC (வாடிக்கையாளர் தகவல் அறிக்கை) விவரங்களை எடுத்துக்கொள்வது போல், கடன் வழங்குநர்களை பற்றிய முழு விவரங்களையும் நாம் விசாரிக்க வேண்டும்.
சில நிறுவனங்கள், கடன் பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் அல்லது வருமானச் சான்றுகள் தேவையில்லை என்ற செய்திகளை அனுப்புகின்றன. இத்தகைய நிறுவனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மோசடியானவை. அவர்கள் உங்கள் முக்கியமான தனிப்பட்ட தரவு, முகவரி மற்றும் பிற விவரங்களைத் திருட முயல்வார்கள். எனவே, நம் விவரங்களைக் கேட்கும் அனைவருக்கும் கொடுக்கக்கூடாது.
சில நேரங்களில், உங்கள் வங்கிக் கணக்கு எண், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள் போன்றவற்றை சேகரிப்பதற்காக கடன் நிறுவனங்களிடமிருந்து அழைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். உங்கள் கணக்கில் கடன் தொகையை டெபாசிட் செய்கிறோம் என்ற பெயரில் கார்டு காலாவதி விவரங்கள், ஓடிபி போன்றவற்றைக் கேட்கும்போது அவர்களின் வலையில் விழ வேண்டாம்.
கடன் வாங்குவதற்கு முன் ஆய்வுக் கட்டணம், வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் காலம், அபராதம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மேலும் கடன் பெறும் நிறுவனங்களின் முகவரி மற்றும் NBFC (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) உடனான ஒப்பந்தத்தை அறிந்து கொள்ளுங்கள். இணையதளம் இல்லாத டிஜிட்டல் லோன் ஆப் சந்தேகத்திற்குரியது.
இதையும் படிங்க: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உலக நாடுகளில் எதிரொலிக்குமா?