சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் Dell நிறுவனம் உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த செய்தி அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கணினி மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, விநியோகம், பழுது பார்ப்பது உள்ளிட்ட சேவைகளை உலக அளவில் வழங்கி வருகிறது Dell நிறுவனம்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ள Dell நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தனது ஊழியர்களில் 6 ஆயிரத்து 650 பேரைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. கடந்த கரோனா காலகட்டத்திற்குப் பிறகு தனி நபர் கணினிகளுக்கான தேவை குறைந்து இருப்பதாகவும், இதனால் வர்த்தக ரீதியாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் டெல் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் கிளார்க் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தங்கள் விற்பனை குழு ஊழியர்களில் பலரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக Dell நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட 6 ஆயிரத்து 650 பேர் பணி நீக்க நடவடிக்கையின் கீழ் வருமா? இதில் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்ற முழுமையான தகவல் வெளியாகவில்லை.
குறிப்பாக Dell நிறுவனம் தங்களுக்கான விற்பனை குழு ஊழியர்களை நியமித்து உள்ள நிலையில், நிர்வாக ரீதியாக முக்கிய திட்டங்களை வகிக்கும் விற்பனை குழுவில் உள்ள சில பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளதாக CRN அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.