ஹைதராபாத்:தீவிர நோய் மருத்துவக் காப்பீடுகள் என்பது சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மாரடைப்பு, உறுப்பு மாற்று மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை, பக்க வாதம் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கான உகந்த பாலிசிகளாகும். இந்த பாலிசிகள் மூலம் சந்தாதாரர்கள் தீவிர நோய்களால் பாதிக்கப்படும்போது மருத்துவ சிகிச்சைக்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கும். இது மற்ற மருத்துவக் காப்பீடுகள் போலவே தோன்றலாம். ஆனால், தீவிர நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த நேரத்தில் தீவிர நோய் மருத்துவக் காப்பீடுகளே அதிக மதிப்பு மிக்கதாகவும், உங்களது குடும்பத்தாருக்கு பக்க பலமாகவும் இருக்கும்.
எடுத்துக்காட்டாக தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணிபுரியும் ராஜீவ் என்பவர் மன அழுத்தம் காரணமாக புகைபிடிக்க ஆரம்பிக்கிறார். நாளடைவில் புகைப்பிடிப்பதற்கு அடிமையாகிறார். ஒருநாள் மயங்கிவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், உடலின் இடது பக்கம் செயலிழந்துவிடுகிறது. இதனிடையே மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைக்காக தனது நிறுவனம் மூலம் பெற்ற மருத்துவக்காப்பீடு தொகையை முழுவதும் பயன்படுத்திவிடுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு தொடர்ந்து மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. மறுப்புறம், அவரால் வேலை செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த காரணிகள் அவரது குடும்பத்தை நிதி சிக்கல்களில் தள்ளிவிடுகிறது. இப்படி பல தீவிர நோய்கள் மூலம் குடும்பமே நிதி சிக்கல்களில் மாட்டிக்கொள்ளலாம். அவற்றை தவிர்க்க தீவிர நோய் காப்பீடுகளை பயன்படுத்தலாம். பொதுவான மருத்துவக்காப்பீடு கொள்கைகளின் கீழ் குறைந்தபட்சமாக ரூ. 5 லட்சம் கிடைக்கும். இதிலும் சந்தாதாரர் சதவீதம், காப்பீட்டு நிறுவனங்கள் சதவீதம் என்று பல்வேறு வகைகள் உள்ளன. இந்த பாலிசிகளின் கீழ் 100 சதவீதத்தை கோரினாலும் தீவிர நோய் பாதிப்புகளுக்கு அது போதுமானதாக இருக்காது. அதுவே தீவிர நோய் காப்பீடுகள் மூலம் சந்தாதாரர் 400 சதவீத கூட்டு தொகையை பெற்றுவிட முடியும். இந்த இழப்பீடு பெரும் நிதி உதவியாக இருக்கும்.