ஹைதராபாத்: எளிய மக்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது குறித்து பொருளாதார நிபுணர்கள் எப்போதும் எச்சரிப்பார்கள். அதற்கு காரணம் பெரும்பாலான மக்களுக்கு அதனை முறையாகவும், பயனுள்ள வகையிலும் எப்படி பயன்படுத்துவது? என்பது தெரியாது. அதனால், சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.
பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், சரியான நேரத்தில் அதை திருப்பி செலுத்த வேண்டும். அதேபோல், கிரெடிட் கார்டின் லிமிட் அதிகரிக்கப்பட்டாலும், நமது தேவைக்கு ஏற்றார்போல் மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும்போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.
இதுபோல கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்தி, இஎம்ஐ செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு பல லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் வழங்குகின்றன. அதில் ஒன்றுதான் கடன் வழங்குவது.
பொதுவாக வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது சற்று நீளமான செயல்முறைதான். தேவையான ஆவணங்கள் இருந்தாலும், உடனடியாக கடன் கிடைத்துவிடாது. இந்த நிலையில், எந்தவித உத்திரவாதமும் வழங்காமல் நம்மால் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற முடியும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுடன் ஒப்பிடுகையில், கிரெடிட் கார்டு மூலம் பெறப்படும் கடனுக்கு வட்டி சற்று அதிகாமாக இருக்கிறது. அதாவது 16 முதல் 18 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். இந்த கடன்களை 36 மாதங்கள் வரை இஎம்ஐ-ஆக செலுத்த முடியும். இந்த கடனுக்கும், கிரெடிட் லிமிட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கூடுதலாக எந்தவித ஆவணங்களும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. எளிதாக கடன் பெறும் வழிகளில் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவதும் ஒன்று.