எதிர்பாராதவிதமாக நாம் உடல்நிலை பாதிக்கப்படும்போதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதும் மருத்துவ காப்பீடு உறுதுணையாக இருக்கிறது. முன்பெல்லாம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. மருத்துவ செலவுகள் அதிகரித்துவிட்டன. அதற்கேற்ப சிகிச்சைகளின் விலையும் உயர்ந்துவிட்டன. 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டை வைத்திருக்க வேண்டியுள்ளது. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது அவசியமானது. ஆனால், அதன் தேவை என்ன..? செலுத்தும் தொகை வீணாகிறதா..? மருத்துவக் காப்பீட்டில் க்ளைம் செய்ய முழுயாக கிடைக்கிறதா..? இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதில்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு போதும் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், திருமணமாகி மனைவி குழந்தைகள் என்று குடும்பம் பெரிதாகிவிட்டால் அந்த காப்பீட்டு தொகை நிச்சயம் போதாது. குடும்பத்தில் புதிய உறுப்பினர் வரும்போதெல்லாம், அதற்கேற்ப காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும். குழந்தை பிறந்து தொண்ணூறு நாட்களான உடன் மருத்துவ காப்பீட்டில் சேர்க்கலாம். பிறந்த உடனேயும் காப்பீட்டில் சேர்க்க சில வழிவகை உண்டு.
மருத்துவ காப்பீட்டில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு முன் காப்பீட்டு நிறுவனத்தின் விதிகளை அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். தேவைப்பட்டால் காப்பீட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற வேண்டும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போதும், காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும்போதும் பிரீமியம் தொகை கூடுவது இயல்பே. அதற்கும் தயாராக இருத்தல் வேண்டும்.
நீங்கள் காலத்திற்கு ஏற்ப அடிப்படை மருத்துவ காப்பீட்டு தொகையை அதிகரிக்க விரும்பவில்லை என்றால் குறைந்தபட்சம் சூப்பர் டாப்-அப் காப்பீட்டையாவது எடுத்துக்கொள்வது நல்லது. மருத்துவ காப்பீடு தேவையான அளவை விட குறைவாக இருந்தால் மருத்துவமனையில் சேர்ப்பது முதல் சிகிச்சை வரை அனைத்திலும் நாம் சமரசம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.