சென்னை:ஊரடங்கு காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க ஒவ்வொரு வண்டிகளிலும் விலைப் பட்டியல்கள் ஒட்டபடுகின்றன. இந்நிலையில், முன்னதாக தமிழ்நாடு வணிகர் பாதுகாப்பு பேரமைப்பு பிரதிநிதிகள், சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியை ரிப்பன் மாளிகையில் சந்தித்துப் பேசினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் செளந்தரராஜன், "கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலைப்பட்டியல் நடமாடும் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன. சந்தையிலிருந்து வாடகை வாகனம் எடுத்து பொருள்களை வாங்கி வந்து, அவை குடியிருப்புகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யபடுகின்றன.
இதற்குத் தேவையான சுமைதூக்கும் கூலித்தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், வாகன ஓட்டுநர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் வியாபாரிகளுக்கு உள்ளன. இச்சூழலில், வீடு தேடி வந்து விற்பனை செய்யும் வண்டிகளில் சந்தை விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் பட்டியலிட்டுள்ளனர். இது நடைமுறையில் சாத்தியமற்றது என வியாபாரிகள் சார்பாக மாநகராட்சி ஆணையரிடம் எடுத்துரைத்தோம்.
தமிழ்நாடு வணிகர் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் செளந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு இதனைத் தொடர்ந்து சந்தை விலை தவறுதலாக ஒட்டப்பட்டு உள்ளதாகவும், அலுவலர்கள் இதனைத் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் ஆணையர் பதிலளித்தார். விரைவில் சரியான விற்பனை விலை தொடர்பாக அலுவலர்களுக்கு உரிய உத்தரவு வழங்கப்படும் என்றும் ஆணையர் உறுதியளித்தார்.
காய்கறிகள் போன்ற பொருள்களை வாங்கி வரும்போது, அதில் பல செலவுகள் வியாபாரிகளுக்கு ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றையும் தவிர்த்து குறைந்தபட்ச லாபத்தை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மேலும், காய்கறி போன்ற பொருள்களில் சில, அழுகிப்போகவும் சேதமடையவும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை மாநகராட்சி ஆணையருக்கு எடுத்துக் கூறினோம்" என்றார்.