உலகளாவிய சந்தைகளின் பலவீனமான குறிப்புகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியுடன் திங்கட்கிழமை வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் நாடுகள் எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில், உற்பத்தி குறைப்புக்கு ஒப்புக்கொண்டது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் முதலீட்டாளர்களும் எச்சரிக்கையாக இருந்தனர்.
இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. சென்செக்ஸ் வரிசையில் பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் எட்டு விழுக்காடு வரை சரிந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, மாருதி, ஓஎன்ஜிசி, டைட்டன் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உள்ளன.
மறுபுறம், பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, இன்போசிஸ் மற்றும் என்டிபிசி ஆகியவை லாபத்தைப் பெற்றன. முந்தைய வியாழக்கிழமை வர்த்தக அமர்வில், மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) 1,265.66 புள்ளிகள், (4.23) விழுக்காடு அதிகரித்து 31,159.62 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.) நிஃப்டி 363.15 புள்ளிகள் (4.15) விழுக்காடு உயர்ந்து 9,111.90 ஆகவும் வர்த்தகம் ஆனது.
தற்காலிக பரிவர்த்தனை தரவுகளின்படி, வியாழக்கிழமை ரூ.1,737.62 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கினார்கள். ஆகவே அவர்கள் மூலதன சந்தையில் நிகர வாங்குநர்களாக இருந்தனர்.