இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தைச் சந்தித்து வந்தது. ஒருகட்டத்தில் 700 புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் இறுதியில் 415.86 புள்ளிகள்(1.33 விழுக்காடு) உயர்ந்து; 31,743.08 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 127.9 (1.40) புள்ளிகள் உயர்ந்து, 9,282.30 புள்ளிகளில் நிறைவடைந்தது.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக இன்டஸ்இண்ட் வங்கி ஆறு விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்தது. அதைத்தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஐந்து விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மறுபுறம் என்.டி.பி.சி., எம்&எம், எச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன.
காரணம் என்ன?
மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க புதிய கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று ஜப்பான் மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதேபோல மற்ற ஆசிய நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் திட்டங்களை அறிவிக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதியதால், இன்று ஏற்றத்துடன் இந்திய பங்குச் சந்தை தொடங்கியதாக, துறை சார்ந்த நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு உதவும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பும் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காண உதவியது.