கொரோனா வைரஸ் தாக்கம் உலகப் பங்குச்சந்தைகளில் கடந்த நான்கு நாள்களாக வெகுவான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலும் வேகமாகப் பரவத்தொடங்கியுள்ளதால் உலகளவிலான பொருளாதாரச் சந்தையில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா பங்குச்சந்தைகள் 33 ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், ஆசிய பங்குச்சந்தைகளிலும் அதன் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரத்தின் இறுதிநாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத பாதிப்பைச் சந்திக்கும் அளவிற்கு வர்த்தகத்தின் தொடக்கம் அமைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மூன்றாயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் தொடங்கி, சுமார் 29 ஆயிரத்து 600 புள்ளிகளில் வர்த்தகமாகியது.