பங்குச் சந்தைகளில் ஏற்றம்
இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீடு எண்ணான சென்செக் 70.75 புள்ளிகள் உயர்ந்து அதாவது 0.19 விழுக்காடு உயர்ந்து 38,095.07 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 35.35 புள்ளிகள், அதாவது 0.31 விழுக்காடு உயர்ந்து 11,462.20 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
எழுச்சி பெற்ற ரிலையன்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 3 சதவிகிதம் வரை உயர்வை சந்தித்தன. அதேவேளையில், மாருதி சுசுகி, ஹீரோ மோட்டர்கார்ப் பங்குகள் 3 சதவிகிதம் வரை சரிவை சந்தித்தன. பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக் மற்றும் மஹேந்திரா அண்ட் மஹேந்திரா பங்குகளும் சரிவைக் கண்டன.
வர்த்தக பற்றாக்குறை குறைவு
நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்ததே சந்தை எழுச்சி பெறுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தகப் பற்றாக்குறை தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 9.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நாட்டின் ஏற்றுமதி 2.44 சதவிகிதம் உயர்ந்ததும், பெட்ரோல் மற்றும் தங்கத்தின் இறக்குமதி கணிசமான அளவு குறைந்ததுமே வர்த்தகப் பற்றாக்குறை குறைவடைய முக்கிய காரணம்.
கவனம் தேவை
பங்குச்சந்தை ஒட்டு மொத்தமாக உயர்வைக் கண்டாலும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் சரிவை சந்தித்தன. இந்த வார இறுதியில் வெளியாகவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை உலக முதலீட்டாளர்கள் மனநிலையை மாற்றியமைக்கும் எனவும் இவை இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.