கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
கரோனா ஊரடங்கிற்கு பின் வணிக பயன்பாட்டிற்காக இயக்கப்படும் சரக்கு வாகனங்கள் மீண்டும் இயக்கப்பட தொடங்கியதால் டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வந்தது. மறுபுறம், கடந்த ஜூன் 29ஆம் தேதி ஐந்து பைசா வரை உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலை அதன் பின் நீண்ட நாள்களாக விலை உயர்வை சந்திக்காமல் இருந்தது.
சுமார் 47 நாட்களுக்குப் பிறகு பெட்ரோலின் விலை நேற்று 12 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தேசியத் தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோலின் விலை 16 பைசாக்கள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது 80.73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.