அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறையான செய்தி ஆகியவற்றால் கடந்த ஒரு வாரமாகவே இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வர்த்தகமானது.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 30 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. மதியம் வரை ஏற்றம் இறக்கம் என்று மாறிமாறி வர்த்தகமான மும்பை பங்குச்சந்தை, மதியம் 2 மணிக்கு மேல் மிகப் பெரியளவில் சரிவைச் சந்தித்தது.
இறுதியில், இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 580.097 புள்ளிகள் (1.31 விழுக்காடு) குறைந்து 43,599.96 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 166.55 புள்ளிகள் (1.29 விழுக்காடு) குறைந்து 12,771.70 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகள் 4.88 விழுக்காடு சரிந்தது. மேலும், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
மறுபுறம், பவர் கிரிட், ஐடிசி, என்டிபிசி, டாடா ஸ்டீல், டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.