வங்கிகளின் நிதிச்சுமையை குறைக்கவும், நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் நாட்டின் பத்து பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தார்.
வங்கி இணைப்பு எதிரொலி - பங்குச்சந்தையில் கடும் சரிவு!
மும்பை: பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
அறிவிப்பு வெளியாகி மூன்று நாள் விடுமுறைக்குப் பின் இன்று தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம் தொடக்கத்திலிருந்தே பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக வங்கிகள், மோட்டார் வாகன நிறுவனங்களின் பங்குகளானது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 770 புள்ளிகள் சரிந்து 36,562 புள்ளிகளில் உள்ளது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225 புள்ளிகள் குறைந்து 10,797 புள்ளிகளில் உள்ளது.
நாட்டின் பொருளாதார மந்த நிலையை சீராக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இருப்பினும் வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஊக்கமளிக்காத வகையில் நம்பிக்கையற்ற சூழல் நிலவி வருவதை இந்த சரிவானது வெளிப்படுத்துவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.