மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 260 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமானது.
கரோனா தொற்றுக்கு ஃபைஸர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்புமருந்து கிட்டத்தட்ட வெற்றிபெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தைகள் பெரியளவில் உயர தொடங்கின. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் பெரியளவில் ஏற்றம் கண்டு வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 680.22 புள்ளிகள் (1.60 விழுக்காடு) உயர்ந்து 43,277.65 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170.05 புள்ளிகள் (1.36 விழுக்காடு) உயர்ந்து 12,631.10 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 8.93 விழுக்காடு உயர்ந்தது. மேலும், இண்டஸ்இண்ட் வங்கி, எல் & டி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.