ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான இந்த விவரம் நேற்று இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டின் நான்கு காலாண்டுகளுக்குமான தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019-20இல் 4.2 விழுக்காடாக உள்ளது.
இதுதான் கடந்த 11 நிதியாண்டுகளிலேயே மிகவும் குறைவான வளர்ச்சி விகிதமாகும். கரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக, தொழில்துறை முடங்கியபின் முதல் முறையாக, இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. இதற்கு முந்தைய மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 விழுக்காடாக இருந்தது.
கரோனா வைரஸ் பரவலால், கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் எப்படியும் சரியும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். எனினும், சென்ற நிதியாண்டு முடிய சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், முடக்கநிலை அறிவிக்கப்பட்டதால், கரோனா வைரஸால் உண்டான முழுமையான பொருளாதாரப் பாதிப்பு, நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான தரவுகள் வெளியாகும்போது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.