இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.10 புள்ளிகள் (0.6 விழுக்காடு) குறைந்து 31,371.12 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 42.65 புள்ளிகள் (0.46 விழுக்காடு) குறைந்து 9,196.55 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஒரு கட்டத்தில் 716 புள்ளிகள்வரை சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் கடைசி கட்டத்தில் கொஞ்சம் ஏற்றம் கண்டதால் நஷ்டம் குறைந்துள்ளது.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் ஆறு விழுக்காட்டிற்கும் மேல் சரிவடைந்தது. அதேபோல் ஏசியன் பெயிண்ட்ஸ், கோட்டக் வங்கி, ஹெச்.யூ.எல், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஓ.என்.ஜி.சி ஆகியவற்றின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. மறுபுறம், என்.டி.பி.சி., பாரதி ஏர்டெல், ஐ.டி.சி., இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
காரணம் என்ன?
கடந்த சில வாரங்களாக வூஹான் மாகாணத்தில் ஒருவருக்குகூட கோவிட்-19 கண்டறியப்படாமல் இருந்தது. இந்நிலையில் அங்கு திடீரென்று ஆறு பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தென் கொரியாவிலும் ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் பலருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று மீண்டும் பரவும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டிவருகின்றனர்.