இந்தூர் (மத்திய பிரதேசம்):தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் அமைப்பு மூலம் கையிருப்பிலிருக்கும் ஒரு லட்சம் டன் வெங்காயத்தை வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக தர்மபுரி நகரில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று (அக். 28) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அதில், ''வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனால் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளையும் மத்திய அரசு உணர்ந்துள்ளது. இதனால், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் அமைப்பு மூலம் கையிருப்பில் இருக்கும் ஒரு லட்சம் டன் வெங்காயத்தை வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது.
சரியான நேரத்தில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்து, இறக்குமதியையும் ஊக்குவித்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை வரும் நாள்களில் படிப்படியாகக் குறையத் தொடங்கும். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில், சந்தையில் எந்தவிதமான கட்டுப்பாடுகள் இல்லாமல் தடைகளை நீக்குவோம் என்று கூறியிருந்தது.
மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவித்தல், ஏபிஎம்சி சந்தை முறையை ரத்து செய்தல், ஒப்பந்த முறையிலான விவசாயத்தை ஊக்குவித்தல், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை ரத்து செய்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால், இதே சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தவுடன் காங்கிரஸ் எதிர்ப்பது, இரட்டை நிலைப்பாடு கொண்டதாக இருக்கிறது.
இடைத்தரகர்களின் நெருக்கடி, அழுத்தத்தால் காங்கிரஸ் இந்தச் சட்டங்களை எதிர்க்கிறது. வேளாண் சட்டங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தவுடன், இப்போது காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றுவலி வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் சில வாரங்களாக கடுமையாக மழை பெய்ததால், வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்து, விலை படிப்படியாக உயரத் தொடங்கி, உச்சகட்டமாக கிலோ 100 ரூபாயைத் தாண்டியது.
இதையடுத்து, வெங்காயத்தின் விலையைக் கட்டுக்குள் வைக்க இறக்குமதிக்கு அனுமதித்த மத்திய அரசு, ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து மொத்த வியாபாரிகள் வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தொடங்கினர். இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயமும் சந்தைக்குள் வரத் தொடங்கியது. இருப்பினும் வெங்காயத்தின் விலை பல்வேறு மாநிலங்களில் ரூ.60க்கு கீழ் குறையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.