மும்பை: ஜியோவில் 7.7 விழுக்காடு பங்குகளை கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளதாக, ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று(ஜூலை 15) நடந்தது. இதில் பேசிய ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி;
'ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முக்கிய முதலீட்டாளராக வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஜியோவில் 7.7 விழுக்காடுப் பங்குகளை ரூ.33,737 கோடிக்கு கூகுள் நிறுவனம் வாங்குகிறது.
ஃபேஸ்புக் நிறுவனத்தை அடுத்து ஜியோ நிறுவனத்தில் இரண்டாவது பெரு முதலீடு மேற்கொள்ளும் நிறுவனம் கூகுள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஜியோ நிறுவனத்தில் 32.84 விழுக்காடுப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஜியோ நிறுவனம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 55 கோடி முதலீடு பெற்றுள்ளது. கடந்த 12 வாரங்களில் ஜியோவில் முதலீடு செய்த 13ஆவது நிறுவனம் கூகுள் ஆகும். இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு ரூ.4.36 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் இன்டெல் நிறுவனம் முதலீட்டையும் சேர்க்கும்போது, ரூ.4.91 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது' என்றார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம் கண்ட அம்பானி!
ஜியோ நிறுவனத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் என்ன என்பதைக் கீழே காணலாம்.
- ஏப்ரல் 22 அன்று 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்த ஃபேஸ்புக் நிறுவனம், அதன் மூலம் 9.99 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
- மே 4 அன்று 5,656 கோடி ரூபாய் முதலீடு செய்த சில்வர் லேக் நிறுவனம் 1.15 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
- மே 8 அன்று 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்த விஸ்டா நிறுவனம் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது.
- மே 17 அன்று 6,598 கோடி ரூபாய் முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக் 1.34 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
- மே 22 அன்று 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்த கேகேஆர் நிறுவனம் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
- ஜூன் 5ஆம் தேதி 9,093 கோடி ரூபாய் முதலீடு செய்த முபாதலா நிறுவனம் 1.85 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
- ஜூன் 5ஆம் தேதி அன்று சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் 4,547 கோடி ரூபாய் முதலீடு செய்து கூடுதலாக 0.93 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
- ஜூன் 8ஆம் தேதி அன்று அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ 5,863.50 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1.16 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
- ஜூன் 13: டிபிஜி நிறுவனம் 4,546.80 கோடி ரூபாய் முதலீடு செய்து 0.93 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
- ஜூன் 13அன்று எல் காட்டர்டன் நிறுவனம் 0.39 விழுக்காடு பங்குகள் மூலம் 1,894.50 கோடி ரூபாய் முதலீடுசெய்துள்ளது.
- ஜூன் 18 தற்போது சவூதியின் பிஐஎஃப் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கி 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
- ஜூலை 2ஆம் தேதி, இன்டெல் நிறுவனம் 0.39 விழுக்காடு பங்குகளில் 1,894.50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
- ஜூலை 15ஆம் தேதி, கூகுள் நிறுவனம் 7.7 விழுக்காடு பங்குகளை பெற்றுக்கொண்டு, 33ஆயிரத்து 737 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.