மும்பை: ஒழுங்கற்ற பங்கு வர்த்தகம் மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சி.என்.பி.சி. தொலைக்காட்சியில் வணிகச் செய்தியாளர் ஹேமந்த் காய், பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தடைவிதித்துள்ளது.
ஹேமந்த் காயின் மனைவி ஜெயா காய், தாய் ஷ்யாம் மோகினி காய் ஆகியோரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்களது பங்கு வர்த்தக கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
பகலில், பங்குகளை வாங்கவும், விற்கவும் பரிந்துரைக்கும் நிகழ்ச்சியை ஹேமந்த் காய் தொகுத்து வழங்கினார். அவ்வாறு அவர் பரிந்துரைக்கும் பங்குகளை, ஒரு நாளைக்கு முன்பே அவரது தாய், மனைவி ஆகியோரின் பங்கு வர்த்தக கணக்கிலிருந்து வாங்கப்பட்டுள்ளது.
முறையே மறுநாள் காலையில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில், அந்தப் பங்குகளை அவர்கள் விற்றுள்ளது செபி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று (செப். 2) வியாழக்கிழமை, செபியின் முழுநேர உறுப்பினர் மாதபி புரி புச், 20 பக்க உத்தரவைப் பிறப்பித்தார். இந்த உத்தரவில், ஹேமந்த் காய் உள்பட மூன்று பேரின் பங்கு வர்த்தகத்திற்கு 2021 ஜனவரி 13 அன்று வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு உறுதிசெய்யப்பட்டது.
ஜனவரி 2019 முதல் இவர்களின் கணக்குகளிலிருந்து ஒழுங்கற்ற வர்த்தகங்கள் நடைபெற்றிருப்பது செபி நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவர்களின் பங்கு வர்த்தகத்திற்கும், ஹேமந்த் காய் தொகுத்து வழங்கிய சி.என்.பி.சி. தொலைக்காட்சியின் 'ஸ்டாக் 20-20' நிகழ்ச்சிக்கும் நேரடித் தொடர்பு இருந்தது விசாரணையில் புலப்பட்டது.
இந்த ஒழுங்கற்ற வர்த்தகத்தின் மூலம், ஒரே ஆண்டில் 2.95 கோடி ரூபாய் முறைகேடாக ஈட்டப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற வணிகத் தொலைக்காட்சி நிறுவனத்தில், பங்கு வர்த்தகர்களை ஏமாற்றும்விதமாக நடந்துகொண்ட செய்தியாளரின் செயல், பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.