இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுதுள்ளது. 1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்ஐசி, கிராமப்புற பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் காப்பீட்டு திட்டத்தை வழங்கிவருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் முடிவு ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு எதிரானது, அந்த நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என எல்ஐசி ஊழியர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பினோய் விஷ்வம் எழுதிய கடிதத்தில், "ஆலோசனை நிறுவனங்களிடம் ஏலத்தை விட முடிவெடுத்துள்ளதாகவும், பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓ நடவடிக்கை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்களை அரசு அணுகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு பணி புரியும் ஊழியர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இதுகுறித்து உங்களின் கவனத்திற்கு எடுத்த வரும் அதே வேலையில், இந்தியாவின் பெருமையான எல்ஐசியின் பங்குகளை விற்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இது உங்களின் கனவு திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு எதிரானது. நாட்டின் நலனுக்கு எதிரான தனியார்மயமாக்கலை நோக்கி செல்லும் நடவடிக்கைக்கு இது முதல்படியாகும்.
நாட்டுக்கு முன்னுரிமை, பயனாளர்களுக்கு நல்ல லாபம் ஆகியவையே எல்ஐசி நிறுவனத்தின் நோக்கங்களாக இருக்கிறது. 2019ஆம் ஆண்டு, மார்ச் 31 ஆம் தேதியின் நிலவரப்படி, 29,84,331 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அரசு திட்டமிட்டபடி பங்குகளை விற்றால் பயனாளர்களுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தும். நிறுவனத்தின் நோக்கமான "உங்கள் நலன் எங்கள் பொறுப்பு" முழுவதுமாக தோற்கடிக்கப்படும். எனவே, தேச நலன் கருதி இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட் - 19 காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வழிமுறைகள் - ஒருபார்வை