கரோனாவுக்குப் பின் கடந்த ஏழு மாதங்களாக தொடர்ந்து டீசல் விற்பனை இந்தியாவில் அதிகரித்துவந்தது. இருப்பினும், கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் டீசல் விற்பனை 7 விழுக்காடு சரிந்துள்ளது.
நவம்பரில் 6.23 மில்லியன் டன் டீசல் பயன்படுத்தப்பட்டது. ஒரு ஆண்டிற்கு முன்பு இதே காலத்தில் 6.7 மில்லியன் டன் டீசல் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், இது அக்டோபர் மாதம் விற்பனை செய்யப்பட்ட 5.7 மில்லியன் டன் டீசலைவிட அதிகமாகும். செப்டம்பர் மாதம் டீசல் விற்பனை கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிய பின்னர், நவம்பரில் வீழ்ச்சியடைந்தது, நுகர்வு பலவீனமாக உள்ளதையே காட்டுகிறது என்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.
மறுபுறம், பெட்ரோல் விற்பனை 2.28 மில்லியன் டன்னிலிருந்து 2.4 மில்லியன் டன்னாக உயர்ந்தது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை 4.5 விழுக்காடு அதிகரித்து, 2.36 மில்லியன் டன்னாக உள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விற்பனை ஆண்டுக்கு 48 விழுக்காடு குறைந்து 3 லட்சத்து 46,000 டன்னாக உள்ளது.