பெய்ஜிங் (சீனா):மெய்நிகர் பணத்தின் மீது வர்த்தகம் செய்வது குற்றம் என சீனாவின் தலைமை வங்கி ஆணையிட்டுள்ளது.
ஏதாவது ஒரு மெய்நிகர் பணத்தின் மீது வர்த்தகம் செய்தாலோ, வேறு நாடுகளின் தளத்தைக் கொண்டு வர்த்தகம் செய்ய முயன்றாலோ அவர்கள் மீது தேச விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2013ஆம் ஆண்டில் இதுபோன்ற வர்த்தகத்திற்கு சீனா தடை விதித்திருந்தது. பின்னர், தடை விலக்கப்பட்டு, வர்த்தகம் செய்ய அனுமதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் மெய்நிகர் பண வர்த்தகத்தில் ஆளுமை செலுத்தி வந்த சீன நிறுவனங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், உலகளவில் உள்ள கிரிப்டோ வர்த்தகர்களுக்கு இது பேரிடியாக விழுந்துள்ளது.
இதற்கு காரணம், ஏதேனும் ஒரு நாடு மெய்நிகர் பண பரிவர்த்தனைக்கோ அல்லது வர்த்தகத்திற்கோ தடை விதித்தால், அதன் பாதிப்பு இந்த பணத்தின் மதிப்பில் பிரதிபலிக்கும்.
தற்போது சீனாவின் இந்த முடிவால், உலகளவில் உள்ள அனைத்து மெய்நிகர் பணத்தின் மதிப்பும் சரிந்துள்ளது. முக்கியமாக, வர்த்தகர்களிடையே பிரபலமாக இருந்து வரும் பிட் காயின், டோஜ் காயின், எத்திரியம் போன்றவை 5% விழுக்காடு அளவு சரிவைச் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க:காயின் டிசிஎக்ஸ்: மெய்நிகர் பணம் குறித்த தகவல்கள் சைகை மொழியில்!