பொருளாதார மந்தநிலை, பணப்புழக்கத் தட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள், ஆட்குறைப்பு, உற்பத்தி நிறுத்தம் போன்ற செயல்பாடுகளின்மூலம் தங்களது இழப்புகளைச் சமாளிக்கும் முயற்சியில் இறங்கின. நிறுவனங்களின் ஜூன் வரையான காலாண்டு முடிவுகளும் மிக மோசமாக வந்ததையடுத்து, பங்குச்சந்தையும் பெரிய சரிவை நோக்கிப் பயணித்தது.
இத்தகைய இக்கட்டான சூழலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றைச் செயல்படுத்துவதற்கு நிதி ஆதாரம் தேவைப்பட்டது. இச்சூழலில்தான், ரிசர்வ் வங்கி தன்வசமுள்ள உபரி நிதியான ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான மத்திய வாரியம், 2018-19 நிதியாண்டுக்கான உபரித்தொகை ரூ.1,23,414 கோடி மற்றும் டிவிடெண்ட் தொகை ரூ.52,637 கோடி என இரண்டும் சேர்ந்து ரூ.1.76 லட்சம் கோடியை வழங்குவதற்கு ஒப்புதல் தந்தது.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதி என்பது, உலகிலுள்ள குறிப்பிட்ட சில நாடுகளின் மத்திய வங்கிகளின் நிதி கையிருப்பைக்கொண்டு கணக்கிடப்படும். மற்ற நாட்டு மத்திய வங்கிகளின் நிதி கையிருப்பு, 14 விழுக்காடாக உள்ளது. நமது ரிசர்வ் வங்கியின் கையிருப்பு அதைவிட இருமடங்காக, அதாவது 28 விழுக்காடாக உள்ளது. எனவே, உபரியாக உள்ள நிதியை வழங்கும்படி ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.