தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

புதிய தொழில்முனைவோர் அடைமானம் இல்லாமல் கடன் பெறலாம்! - புதிய தொழில் முனைவோர்

சென்னை: முதல்முறையாக தொழில்தொடங்குபவர்கள் அடைமானம் இல்லாமல் கடன் வசதி பெறும் திட்டத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

scheme
scheme

By

Published : Dec 24, 2019, 3:52 PM IST

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் என்பது உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு கடன் வசதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இங்கு கடன் பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தொழிற்கடன் பெறும் சிறு, குறு நிறுவனங்களுக்கு அவர்கள் பெறும் கடனுக்கான வட்டியிலிருந்து ஆறு சதவிகிதம் திரும்பச் செலுத்தப்படும். அதேபோல், நடுத்தர நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கான வட்டியில் மூன்று சதவிகிதம் திரும்ப செலுத்தப்படும்.

தற்போது தொழில் முதலீட்டுக் கழகத்தில் நிறுவனங்களின் அளவிற்கேற்ப 11.95 முதல் 13.95 சதவிகித வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதால் அதற்கு இணையாக கடன் வழங்கும் வகையில், வட்டித் தள்ளுபடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கும் திட்டம், தொழிற்சாலைகளுக்கான எந்திரங்கள் மற்றும் பாகங்களுக்கு விரைவாக கடன் பெறும் திட்டம், மருத்துவர்கள் புதிதாக சிறிய அளவில் மருத்துவமனைகள் அல்லது சோதனைக் கூடங்கள் தொடங்குவதற்கான கடன் வழங்கும் திட்டம் ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர, அரிசி அரவை ஆலைகள், உணவுப்பொருள் பதப்படுத்தும் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ( டிஐஐசி ) மூலம் கடன் பெற முடியும்.

தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலமாகக் கடன் பெறுபவர்களுக்கு அரசு கொடுக்கும் மானியம் நேரடியாகக் கிடைக்கும்.

’துளிர்’ - முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கான சிறப்புத் திட்டம் அறிமுகம்

மேலும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு குறிப்பாக, முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் மற்றும் கடன் வசதி வழங்கும் வகையில் ’துளிர்’ என்னும் சிறப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன் பெறுபவர்கள், தங்களது திட்டத்தை தொழில் முதலீட்டுக் குழுவிடம் விளக்கி அதன்படி தேர்வானால், அடைமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும். பொதுவாக வங்கிகளில் புதிதாகத் தொழில் தொடங்குவோர் அவ்வளவு எளிதாகக் கடன் பெற முடியாத சூழல் உள்ள நிலையில் இங்கு அவர்கள், மிக எளிய முறையில் கடன் பெற முடியும்.

இங்கு தொழில் நிறுவனங்களுக்கு எந்திரங்கள், நிலம் உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்குவதுடன், வொர்கிங் கேப்பிட்டல் என்றழைக்கப்படும் நிறுவனங்களின் அன்றாடச் செலவுகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரியால் பயனடைந்த சோப் உற்பத்தியாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details