பேட்டரியால் இயக்கப்படும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத மின்சார வாகனங்களுக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 100 சதவிகிதம் வரிவிலக்கு அளிக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
காற்று மாசு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் இயற்கைக்கு உகந்த வகையிலான மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு அதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மின்சார வாகனக் கொள்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேட்டரியால் இயக்கப்படும் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கும், மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கும் 50 சதவிகிதம் வரி விலக்கு அளித்து முன்னதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்க வேண்டும் என, போக்குவரத்து ஆணையர் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் சாதக, பாதகங்கள் கவனமான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.