கரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்துறையும் பாதிப்புகளை சந்தித்துவருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புகளையே சந்தித்தது எனலாம். சில இடங்களில், கரோனா பாதிப்பு இத்துறைக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொலைவில் இருந்தே இயங்கும் இயல்பு (Remote working) காரணமாக ஐடி துறை ஊரடங்கு காலத்துக்கு ஏற்ப வீட்டிலிருந்தே பணியில் ஈடுபட்டது.
கரோனா தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து தொழில் வணிகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அதன் தாக்கம் போன்றவை குறித்து எஸ்டிபிஐ (STPI) அமைப்பின், சென்னை மண்டல இயக்குநர் சஞ்சய் தியாகி ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசும்போது, ”மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான எஸ்டிபிஐ எனப்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா, நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியை ஊக்குவித்துவருகிறது.
- கடந்த 6 மாதங்களில் தமிழ்நாட்டிலிருந்து ரூ.25,000 கோடி மதிப்பிலான மென்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் 95% தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள்.
- வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் நிறுவனங்களின் செயல்திறன் 30% வரை அதிகரித்துள்ளது; நிறுவனங்களின் செலவு குறைந்துள்ளது.
- கரோனா பாதிப்பால் நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது 30%-35% அதிகரித்துள்ளது.
- நாட்டை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமிக்கதாக மாற்ற தமிழ்நாடு 500 பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட வேண்டும்.
வீட்டிலிருந்து பணியாற்றுவதால் செயல்திறன் அதிகரிப்பு
கரோனா பாதிப்பால் தகவல் தொழில்நுட்பத் துறை வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறைக்கு மாறியது. தொடக்கத்தில் சில சவால்கள் இருந்தபோதும், தற்போது 95% ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கின்றனர். இவ்வாறு வேலை பார்ப்பதால் நிறுவனங்களின் செயல்திறன் 18%-30% அதிகரித்துள்ளது. கரோனா தொற்று தகவல் தொழில்நுட்பத் துறையில் நேர்மறையான மாற்றங்களையே ஏற்படுத்தியுள்ளது.
கைக்கொடுத்த டிஜிட்டல் இந்தியா
2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், பலதரப்பினருக்கும் புதிய தொழில்நுட்பங்கள், இணைய வழியில் அரசு சேவைகள் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த மக்களை வலியுறுத்திவந்த நிலையில், கரோனா பிரச்னை அதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பால் நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது 20%-35% அதிகரித்துள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருந்ததால் இது சாத்தியமானது. ஒருவேளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்படாமல் இருந்திருந்தால் இதுபோன்ற பேரிடர் காலத்தில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியிருப்போம்.