தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பெரு நிறுவன உற்பத்தி குறைவால் பாதிப்படையும் சிறு, குறு நிறுவனங்கள்! - சிறு நிறுவனங்கள் பாதிப்பு

சென்னை: பொருளாதார மந்தநிலை காரணமாக பெரு நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பதால் தாங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக சிறு, குறு நிறுவனங்கள் கூறுகின்றன.

smaller industeries impacted by Economic slowdown

By

Published : Nov 13, 2019, 9:52 AM IST

நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவிவருவதாகவும் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துவிட்டதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பல பெரு நிறுவனங்கள், குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்துவருகின்றன. இதனால் தங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க தாமதமாவதாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு சிறு, குறு நிறுவனங்கள் சங்கத்தின் (TANSTIA) முன்னாள் செயலாளர் மோகன், "பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதியாகத்தான் ஆட்டோமொபைல் துறை தற்போது பிரச்னைகளை சந்தித்துவருகிறது. பெரு நிறுவனங்கள் மந்தநிலையை சந்தித்துவருவதால் அதனைச் சார்ந்திருக்கும் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. அவற்றுக்கு வழங்கப்படும் ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதனால் வேலையிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

உற்பத்தி குறைவால் உதிரிபாக நிறுவனங்கள் பாதிப்பு

ஆட்டோமொபைல் துறையில்தான் பெரிய அளவில் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மின்சார வாகன கொள்கை, மின்சார வாகனங்களை மத்திய அரசு ஊக்குவிப்பதால் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க ஆர்வம் காட்டுவதில்லை. அதேபோல், பிஎஸ்- 6 வாகனங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதை முன்னிட்டு பிஎஸ்- 4 வாகனங்களின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆர்டர்கள் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் சிரமங்களைச் சந்தித்துவருகின்றன.

தமிழ்நாடு சிறு, குறு நிறுவனங்கள் சங்கத்தின் (TANSTIA) முன்னாள் செயலாளர் மோகன் பேட்டி
இது தவிர, பொதுத் துறை நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க காலம் தாழ்த்துவதாலும் சிறு தொழில்கள் நீண்ட நாள்களாகப் பிரச்னையை சந்தித்துவருகின்றன. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் சில நேரங்களில் தாங்கள் வழங்க வேண்டிய தொகையை எட்டு மாதங்களுக்குப் பிறகுதான் வழங்குகின்றன. இதனால் அந்நிறுவனங்கள் வங்கிகளின் வாராக்கடன் பட்டியலுக்குச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. அரசு சிறு, குறு நிறுவனங்களுக்கு போதிய அளவுக்கு உதவி செய்வதில்லை என்பதே உண்மை.

தற்போது, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிறு, குறு நிறுவனங்கள் அதிகளவில் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும்தான் பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கிறார்கள். அவை பணத்தை தாமதமாகவே வழங்குகின்றன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு தொழில்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. சிறு நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து கடன் பெறுவதில்லை, வெளியிலிருக்கும் நபர்களிடமிருந்தே கடன் பெறுகிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணத்தை நம்பியே தொழில் செய்துவந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன" எனக் கூறினார்.

அரசின் நடவடிக்கை அவசியம்! அவசரமும்கூட...

இதைத்தொடர்ந்து பேசிய கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் பாட்ஷா, "நாட்டின் மொத்த உற்பத்தியில் 45 சதவிகித சிறு நிறுவனங்களே அதே அளவுக்கு வேலைவாய்ப்பையும் சிறு தொழில்கள் வழங்குகின்றன. நாட்டின் ஏற்றுமதியிலும் சிறு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போதைய சூழலில், 50 சதவிகித தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பெரு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்துவருகின்றன. இதனால் எங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை தாமதமாக வழங்குகிறார்கள். 90 நாள்கள் வரை கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என்றால் எங்கள் கடனை வங்கிகள் வாராக்கடனாக அறிவிக்கின்றன.

அடுத்த 90 நாள்களில் சொத்துகளை ஏலத்தில் விடுகின்றன. இதனால் தொழில்களை மூடும் சூழலுக்குத் தள்ளப்படுகிறோம். வங்கிகளின் நிலையும் இதே அளவில்தான் இருக்கிறது. தொழிலாளர்கள் நிலை இன்னும் மோசமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதாக நிதியமைச்சர் கூறுகிறார். இந்த நேரத்தில் அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் பாட்ஷா பேட்டி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் இவையே இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியின் மையப்புள்ளியாக உள்ளது. தற்போது இங்குள்ள நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துவருகின்றன. இது தவிர, தோல் உற்பத்தி, ஆடை உற்பத்தி ஆகியவற்றிலும் இதே நிலைதான் உள்ளது.

ஒரு மாதம் 24 நாள்கள் வேலை இருந்துவந்த நிலையில் தற்போது 18 நாள்கள்தான் பணி நடைபெறுகிறது. ஒரு தொழிலாளிக்கு ஆறு நாள்கள் வேலை இல்லாத சூழல் ஏற்படுகிறது. இதன் தாக்கம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீதும் ஏற்படுகிறது. பெரு நிறுவனங்களின் உற்பத்தி குறைவதால், அவர்களிடமிருந்து ஒப்பந்த பணிகளைச் செய்யும் சிறு நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கப்படுவதில்லை" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details