நாட்டின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாகக் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு கடுமையான வேலையிழப்பு ஏற்பட்டது.
சரிவில் இந்திய பொருளாதாரம் அதேபோல் கட்டுமானத்துறையும் பெருமளவில் முடக்கத்தைச் சந்தித்துள்ளதால் ஒட்டுமொத்த உற்பத்தித்துறையின் வளர்ச்சியானது 0.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், நடப்புக் காலாண்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி கடுமையான சரிவைச் சந்தித்து ஐந்து சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், முதலீட்டை ஊக்குவித்து உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் வங்கிகள் கடனளிக்கும் வட்டி விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைப்பதன் மூலம் அதன் பயன் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் சென்றடையும். இதன் மூலம் முதலீடு அதிகரித்து பொருளாதாரம் சீர் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த ஆகஸ்ட் மாத நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 35 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இம்முறை சுமார் 40 புள்ளிகள் வட்டிகள் குறைக்கப்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.