சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்லூரியில், அதன் நிறுவனர் செல்லையா நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம், இந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை நமது நாட்டின் பழங்கால பொருளாதார அறிவையும், தற்கால பொருளாதார அறிவையும் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 1750-களில் இந்தியா உலகில் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக விளங்கியதாக கூறிய அவர், இந்த நிலையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றார்.
மேலும், திருக்குறள் மற்றும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் இருந்து வரிகளை மேற்கோள் காட்டி பேசிய கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம், சந்தையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கருத்து தெரிவித்தார்.
தனியார்மயமாவதால் ஒரு நிறுவனத்தின் மதிப்பும், அதன்மூலம் கிடைக்கும் லாபமும் அதிகரிக்கும் என்று கூறிய அவர் இதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார். பாரத் பெட்ரோலியத்தை தனியார் மயமாக்கும் முடிவு அறிவிக்கப்பட்டதும் அதன் மதிப்பு உயர்ந்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ரங்கராஜன், முதலாளித்துவம் எல்லா இடங்களில் சரியாக இயங்காது என்றார். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாகும்போது முதலாளித்துவம் குறித்து யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள் என்று கூறிய அவர், அதே சமயத்தில் வளர்ச்சி குறைந்து, மக்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்காத போது, முதலாளித்துவத்தால் ஏற்படும் பொருளாதார ஏற்ற தாழ்வு குறித்து கேள்வி எழுப்பப்படும் என்றார். முதலாளித்துவத்தால் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டாலும், இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான மக்கள் வறுமையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக ரங்கராஜன் தனது உரையில் குறிப்பிட்டார்.
சுதந்திர சந்தையில் நம்பிக்கை வைக்க வேண்டும், இதன் மூலமாகவும் பொருளாதார வளர்ச்சியையும் வளத்தையும் உருவாக்க முடியும் என்று கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் கூறிய நிலையில், அவரைத் தொடர்ந்து பேசிய ரங்கராஜன், அரசின் புள்ளிவிவரங்கள் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், அரசு இதனை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார். அரசின் புள்ளிவிவரங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்திடம் கூறினார்.
அரசின் புள்ளிவிவரங்களில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பொது மேடையில் அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரிடம், அரசின் தரவு குறித்த பிரச்னையை துணிவாக, அதே சமயத்தில் அரசை விமர்சிக்காமல் சாதுர்யமாக ரங்கராஜன் எடுத்துரைத்ததை அனைவரும் பாராட்டினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், "தற்போது பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன். தேசிய வருமானத்தை கணக்கிடும் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் மக்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளது. அரசு எதனடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன என்பதை விளக்க வேண்டும் இதை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை" என்றார்.
இதையும் படிங்க: நிதி அமைச்சகத்துக்கு புதிய செயலாளர் நியமனம்!