மாநிலங்களவையில் ரயில்வே துறை குறித்த விவாதத்தில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை, பியூஷ் கோயல் திட்டவட்டம் - ராஜ்ய சபா
டெல்லி: ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாநிலங்களவையில் பேசிய பியூஷ் கோயல், மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசலுக்கான வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், ரயில் கட்டணத்தை உயர்த்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக டீசல் என்ஜின் பயன்பாட்டைப் பெருமளவில் குறைத்துள்ளோம். 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களையும் மின்சார மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
அத்துடன் இயற்கை எரிவாயுவை தற்போது அதிகமாகப் பயன்படுத்துவதால், கச்சா எண்ணெய் மீதான சார்பானது தவிர்க்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே 20.44 பில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 3.1 பில்லியன் லிட்டர் டீசலையும் பயன்படுத்தியுள்ளது என பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.