டெல்லி: வேளாண் பயிர்களுக்கு அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள், உள்நாட்டு சந்தை விலைகள் மற்றும் சர்வதேச சந்தை விலைகளை விட அதிகமாக உள்ளன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது. "பொருளாதார நெருக்கடி" உருவாவதற்கு முன்னர் மாற்று தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) எனப்படும் விகிதத்தை அரசாங்கம் நிர்ணயிக்கும் அதே வேளையில், கோதுமை மற்றும் நெல் போன்ற பயிர்களை விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது. மேலும் சர்க்கரை ஏற்றுமதி செய்ய உதவும் மானியத்தையும் வழங்குகிறது.
இந்தத் துறையின் மிக முக்கியமான சிக்கல் என்னவென்றால், வேளாண் பொருள்களுக்கான சர்வதேச விலை மற்றும் சந்தை விலை மற்றும் உள்நாட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றில், ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அதேசமயத்தில் இம்மாதிரியான நெருக்கடி சூழலின்போது நிறைய பிரச்னைகள் ஏற்படும். எனவே அரசாங்கம் முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை, மிகவும் கடினம் என்று கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் 60 லட்சம் டன் சர்க்கரைக்கு 6,000 கோடி ரூபாய் ஏற்றுமதி மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் சர்க்கரையும் தற்போது உபரியாக தேக்கம் அடைந்துள்ளது. அதேசமயம், அயல் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் எண்ணெய் வித்து உற்பத்தி மிகக் குறைவு என்பதால், 90,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பெரிய அளவிலான சமையல் எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது.
அமெரிக்கா மற்றும் பிரேசிலில் ஒரு ஏக்கருக்கு சோயாபீன் உற்பத்தி முறையே 30 குவிண்டால் மற்றும் 27-28 குவிண்டால் மகசூல் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது ஒரு ஏக்கருக்கு 4.5 குவிண்டால் மட்டுமே மகசூல் அளிப்பதாக அவர் தெரிவித்தார். எனவே, அதிக உற்பத்தி திறனுக்காக நாட்டில் தரமான எண்ணெய் வித்துக்களை தயார் செய்வது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.