நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கும் விதமாக ஜன்தன் வங்கித் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கி தற்போது ஆறாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், அதன் பயனாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அரசு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் வங்கிக்கணக்கு பெற்றுள்ள சுமார் 40.35 கோடி பயனாளர்களுக்கு ஜீவன் ஜோதி பீமா யோஜ்னா, சுரக்ஷ பீமா யோஜ்னா என இருவகை சிறு காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், ஜீவன் ஜோதி பீமா திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டதை பயன்படுத்திக் கொள்பவர்கள் எந்த காரணத்தால் உயிரிழந்தாலும் அவர் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக அந்த நபர் தனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரே தவணையாக ரூ. 330 செலுத்தினால் போதும்.
அதேபோல், 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள், சுரக்ஷ பீமா யோஜ்னா திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டதை பயன்படுத்திக் கொள்பவர்கள் விபத்தின் மூலம் உயிரிழக்கும் பட்சத்தில் இரண்டு லட்சமும், விபத்தின் மூலம் திறன்குறைபாடு ஏற்பட்டால் ஒரு லட்சமும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதற்காக அந்த நபர் தனது வங்கிக் கணக்கிலிருந்து ஆண்டுதோறும் ரூ.12 தவணை செலுத்தினால் போதும்.
இதையும் படிங்க:2020 நிதியாண்டில் ரூ.1.86 லட்சம் கோடி வங்கி மோசடி - ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்